Friday, December 28, 2012

தொழிற்களம் டிசெம்பர் 30 விழா - கருத்தரங்கம் - பேச்சாளர்கள்!


தொழிற்களம் ஏற்று நடத்தும் "உறவோடு உறவாடுவோம்" விழா பற்றி நீங்கள்    அறிந்திருப்பீர்கள். விழாவின் கருத்தரங்கத்தில் சமூகத்திற்கு அவசியமான ஐந்து தலைப்புகளில் கருத்துக்களைப் பதியவிருக்கும் பேச்சாளர்களைப் பற்றிய குறிப்புகளை நாம் இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம் - அவர்கள் பேசவிருக்கும் தலைப்புகளோடு சேர்த்து.

இயற்கையும் தனிமனித ஒழுக்கமும்!
 - திரு. சொக்கலிங்கம் அவர்கள்

சொக்கலிங்கம் அவர்கள் முப்பது ஆண்டுகளாக பனியன் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.  1997 ஆம் ஆண்டு வரை வெஸ்ட் கோஸ்ட் இண்டஸ்ட்ரீஸ் (West Coast Industries) என்ற நிறுவனத்தில் வர்த்தக மேலாண்மைத் துறையில் மேலாளராகப் பணியாற்றி வந்தார்.

அதன் பிறகு, ஹாங்காங் (Hongkong) பல்கலைக்கழகத்தில் "ஆயத்த ஆடை வடிவமைப்பு" ஆலோசகராக இருந்து வந்தார். பிறகு, இவரது பிள்ளைகளின் வேண்டுதலின் பேரில் மீண்டும் திருப்பூருக்கு (இவரது சொந்த ஊர் - திருப்பூர்) வந்து பனியன் உற்பத்தி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.

தமிழ் ஆர்வம் ஏன் வந்தது என்று இவரிடம் கேட்டால், "தமிழில் தனியாக ஆர்வம் வரவேண்டும் என்று இல்லை, அது தானே எல்லாம் நமக்கு, நம் மொழி அது.." என்று சொல்கிறார்.

இவர்," தமிழ் வழியில் கல்வி பயின்றதால் எளிதாக என்னால் எதையும் புரிந்து கொள்ள முடிந்தது..." என்று குறிப்பிடுகிறார், இவரது தமிழ் வழிக் கல்வி பற்றிப் பேசும்  போது.

தமிழ் வழியில் கல்வி பயின்றால் தமிழகத்தில் மட்டுமே "சிறப்பாகப்" பணிபுரிய முடியும் என்று பலரும் நினைப்பதுண்டு. ஆனால், தமிழ் வழியில் கல்வி பயின்றாலும் உலகத்தில் எல்லா இடங்களிலும் சிறப்பாகப் பணியாற்ற முடியும் என்பதற்கு இவர் ஒரு முன்னுதாரணம்.

சுதந்திரமும் நம் சமூக பங்களிப்பும்!
 - திரு. ஈஸ்வரன் அவர்கள் 

இவரது சொந்த ஊர் தாராபுரம் தாலுகாவில் இருக்கும் சேலம்பாளையம் எனும் கிராமம். பொதுசேவை செய்வதையே தனது முழு நேரக் கடமையாக செய்து வருகிறார். லஞ்சம் ஊழலுக்கு எதிராக திருப்பூரில் செயல்பட்டு வருகிறார். "தகவல் அறியும் உரிமைச் சட்டம்"  - Right To Information Act (RTI) இதை மக்களுக்குத் தெளிவாக விளக்குவதுடன், அந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி பலருக்கும் நியாயம் பெற்றுத் தந்திருக்கிறார்கள் ஐவரும் இவரது அமைப்பைச் சார்ந்தவர்களும் சேர்ந்து.

அதிகமாக "கேபிள்" டி.விக்கு கட்டணம் வசூலித்தவர்கள்; அதிக விலைக்கு சமையல் எரிவாயு விற்பனை செய்தவர்கள் ; இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் ஓட்டுனர் உரிமம் வழங்க  அதிக பணம் கேட்டவர்கள்; குடிநீர் இணைப்புத் தர அதிக பணம் கேட்டவர்கள்; அதிகக் கட்டணம் வசூலித்த தனியார்ப் பள்ளிகள் இப்படி தவறு செய்யும் பலரையும் திருப்பூரில் அடையாளம் கண்டு சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள் இவரும் இவரது அமைப்பைச் சேர்ந்தவர்களும்.

மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற கொள்கையோடு இரவு பகலாகப் பாடுபடும் உயரிய மனிதர் நமது ஈஸ்வரன் ஐயா.

தமிழ் என் அடையாளம்!
   திருமதி கோவை மு சரளா அவர்கள் 

இவர் தனியார் பொறியியல் கல்லூரியில் ஒருங்கிணைப்பாளராகப் பணிபுரிகிறார். உளவியல் பட்டம் பெற்றிருக்கிறார். தமிழின் மீது கொண்ட காதலால் தமிழ் மொழியில் முனைவர் தகுதி ஆய்வை மேற்கொண்டிருக்கிறார் . கடந்த எட்டு வருடகாலமாக கவிதை கட்டுரைகளைப் பல்வேறு இதழ்களுக்கும் ,மின் இதழ்களுக்கும் எழுதி வருகிறார். 

குவைத்திலிருந்து வெளிவரும் ஈகரை இணைய கட்டுரை போட்டியில் இவரின் "பெண்ணாய்ப் பிறந்திட" என்னும் கட்டுரை இரண்டாவது பரிசைப் பெற்றிருகிறது .

ஜெர்மனியில் இருந்து வெளிவரும் தமிழமுதம் என்னும் இதழில் வெளிவந்த "ஈழத்து சகோதரிக்கு " என்னும் கவிதை  முதல் பரிசு பெற்றிருகிறது .

மௌனத்தின்  இரைச்சல்கள் , காதலின் சாரல் என்னும்  இரண்டு கவிதை நூல்கள் புத்தாண்டில் வெளிவர இருக்கிறது. சமூக நல ஆர்வலராக, உளவியல் ஆலோசகராக ,கவிதாயினியாக ,ஆசிரியராக ,பல்வேறு அவதாரங்களில் தன்னை  நிலைப்படுத்தி கொண்டு இருக்கிறார்.

திரை கடல் ஓடியும் திரவியம் தேடு!
 - திரு. பொற்கை பாண்டியன் அவர்கள்

இவரது சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம் பாலாமடை கிராமம். தற்போது மதுரையில் வசித்து வருகிறார். இவர் சலவைக் கல் (கிரானைட்) ஏற்றுமதி செய்து வருகிறார். நெல்லை அதியமான் பெருஞ்சித்திரனார் நடத்தி வந்த "தென்மொழிப் பத்திரிகையில்" இவரது ஆசிரியராக இருந்தார். இவர் தாய் தந்தை இருவருமே தலைமை ஆசிரியர்களாகவும், சிறந்த தமிழ் ஆர்வலர்களாகவும் இருந்து வந்தவர்கள். இவர் உடன் பிறந்தவர்களில் இவர் தான் இன்று பெரும் தமிழ் ஆர்வம் கொண்டவராய் இருந்து வருகிறார்.

இவர் பெருஞ்சித்திரனாரின் மீது கொண்ட மரியாதையாலும் அன்பாலும், இவரது மகனுக்கு "பெருஞ்சித்திரனார்" என்று பெயர் சூட்டி இருக்கிறார். 

"எத்தனை பணிகள், தொழில் சார்ந்த வேலைகள் இருந்தாலும், தமிழுக்காக, தமிழ் மண்ணுக்காக, மக்களுக்காக  ஏதாவது செய்ய வேண்டும் ", என்ற கொள்கையை உடையவர்.

இணையத்தால் இணைவோம்!
 திரு. மதுமதி அவர்கள்

 கல்லூரியில் படித்த போது, "மில்லேனியம் ஆண்டின் சிறந்த மாணவன் என்கிற கல்லூரி தந்த விருது" ;  பாரதியார் மாணவர் தமிழ் மன்றம் வழங்கிய இளந்தமிழறிஞர் விருது மற்றும் தமிழய்யா கல்விக்கழகம் வழங்கிய இலக்கியத்திலகம் விருது போன்றவை இவர் கல்லூரிக் காலத்திலேயே சிறந்த தமிழ் எழுத்தாளராக உருவாகத் தொடங்கியதற்குச் சான்றுகள்.

இவரது முதல் கவிதைப் புத்தகத்தையும் கல்லூரியே வெளியிட்டிருக்கிறது; இவர் பயின்ற ஸ்ரீ வாசவி கல்லூரி (ஈரோடு) முதல்வர் திரு. சிவக்குமார் அவர்களுக்கு இவர் எழுத்தாளராக உருவானதற்கு முக்கியப் பங்கு இருக்கிறது என்று நன்றியோடு குறிப்பிடுகிறார். பல மாத இதழ்களில் இவர் எழுதி வருகிறார்.

ஐம்புலன்,கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் கோபம், அம்மு கொலை வழக்கு, ஆருத்ரன் போன்ற திரைப்படங்களில் பாடலாசிரியராக இருந்திருக்கிறார். இன்னும் வெளிவராத சில படங்களுக்கும் பாடலாசிரியராக இருக்கிறார். வகுப்பு வாதங்களை புறக்கணிக்கும் இவர், பேச்சளவில் மட்டும் இல்லாமல், கலப்புத் திருமணமும் செய்திருக்கிறார்.

"தற்போது சிறிய பட்ஜெட் படங்களில் மட்டும் எழுதிவருகிறேன், விரைவில், பெரிய படங்களிலும் நீங்கள் என் பாடல்களை எதிர்பாக்கலாம்", என்று நம்பிக்கையோடு சொல்கிறார். இவரது இயற்பெயர் "மாதேஷ்".

2 comments:

  1. தாய் மொழியில் கல்வி பயில்வதுதான் சிறப்பு

    அறிந்து கொள்வதும் புரிந்து கொள்வதும் எளிது.

    வேற்று மொழியில் கல்வி கற்றால் அதை புரிந்து கொள்வதற்கு பிறிதொரு மொழியை நாட வேண்டியிருக்கும்.

    என்னுடைய வலைப்பதிவுகளில் நான் தமிழ் மொழியைத்தான் அதிகம் பயன்படுத்துகிறேன்.

    அதன் மூலம் என்னுடைய கருத்துக்களை சிதைக்காமல் உள்ளதை உள்ளபடி சொல்ல முடிகிறது.

    தாய் மொழியில் கல்வி கற்கும் சீனர்கள்,ஜப்பானியர்கள், பிரெஞ்சு மக்கள் மற்றும் அநேக நாட்டு மக்கள் எல்லாவற்றிலும் சிறந்து விளங்குகின்றனர்கள்.

    ஆனால் தமிழர்களோ தமிழையும் ஒழுங்காக கற்பதும் கிடையாது. பேசுவதும் கிடையாது.

    எந்த மொழியையும் கசடற கற்பது கிடையாது. எல்லாம் அரைகுறை.

    தமிழர்களுக்கு தெரிந்ததுஎல்லாம். நடிகரோ அல்லது ஒரு அரசியல்வாதியின்அல்லது ஒரு மதவாதியின் பின்னால் ஓடுவது. ஒன்றுதான்

    யார் எதைசொன்னாலும் அதை அப்படியே நம்பி மோசம் போவதுதான்.

    படித்தவனும் பாமரனும் ஒன்று இந்த விஷயத்தில் மட்டும்.

    எப்போதும் உணர்ச்சிக்கும் கவர்ச்சிக்கும் அடிமையாகி விட்டில் பூச்சி போல் மாயும் மனித கூட்டம்தான் தமிழர்கள்

    உண்மை இதுதான்.

    தவறை உணர்ந்துகொண்டு என்றாவது திருந்துமா இந்த தமிழரினம்?

    ReplyDelete
    Replies
    1. உண்மை, சரியாகச் சொன்னீர்கள்!

      நன்றி.

      Delete

உங்கள் ஆலோசனைகளையும், கருத்துகளையும் தெரிவியுங்கள் நண்பர்களே!!

உங்களின் ஒவ்வொரு உற்சாகமும் தான் நம்மை மேலும் வேகமாக உந்திச்செல்லும் சக்தியாக இருக்கிறது...