Friday, December 28, 2012

தொழிற்களம் டிசெம்பர் 30 விழா - கருத்தரங்கம் - பேச்சாளர்கள்!


தொழிற்களம் ஏற்று நடத்தும் "உறவோடு உறவாடுவோம்" விழா பற்றி நீங்கள்    அறிந்திருப்பீர்கள். விழாவின் கருத்தரங்கத்தில் சமூகத்திற்கு அவசியமான ஐந்து தலைப்புகளில் கருத்துக்களைப் பதியவிருக்கும் பேச்சாளர்களைப் பற்றிய குறிப்புகளை நாம் இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம் - அவர்கள் பேசவிருக்கும் தலைப்புகளோடு சேர்த்து.

இயற்கையும் தனிமனித ஒழுக்கமும்!
 - திரு. சொக்கலிங்கம் அவர்கள்

சொக்கலிங்கம் அவர்கள் முப்பது ஆண்டுகளாக பனியன் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.  1997 ஆம் ஆண்டு வரை வெஸ்ட் கோஸ்ட் இண்டஸ்ட்ரீஸ் (West Coast Industries) என்ற நிறுவனத்தில் வர்த்தக மேலாண்மைத் துறையில் மேலாளராகப் பணியாற்றி வந்தார்.

அதன் பிறகு, ஹாங்காங் (Hongkong) பல்கலைக்கழகத்தில் "ஆயத்த ஆடை வடிவமைப்பு" ஆலோசகராக இருந்து வந்தார். பிறகு, இவரது பிள்ளைகளின் வேண்டுதலின் பேரில் மீண்டும் திருப்பூருக்கு (இவரது சொந்த ஊர் - திருப்பூர்) வந்து பனியன் உற்பத்தி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.

தமிழ் ஆர்வம் ஏன் வந்தது என்று இவரிடம் கேட்டால், "தமிழில் தனியாக ஆர்வம் வரவேண்டும் என்று இல்லை, அது தானே எல்லாம் நமக்கு, நம் மொழி அது.." என்று சொல்கிறார்.

இவர்," தமிழ் வழியில் கல்வி பயின்றதால் எளிதாக என்னால் எதையும் புரிந்து கொள்ள முடிந்தது..." என்று குறிப்பிடுகிறார், இவரது தமிழ் வழிக் கல்வி பற்றிப் பேசும்  போது.

தமிழ் வழியில் கல்வி பயின்றால் தமிழகத்தில் மட்டுமே "சிறப்பாகப்" பணிபுரிய முடியும் என்று பலரும் நினைப்பதுண்டு. ஆனால், தமிழ் வழியில் கல்வி பயின்றாலும் உலகத்தில் எல்லா இடங்களிலும் சிறப்பாகப் பணியாற்ற முடியும் என்பதற்கு இவர் ஒரு முன்னுதாரணம்.

சுதந்திரமும் நம் சமூக பங்களிப்பும்!
 - திரு. ஈஸ்வரன் அவர்கள் 

இவரது சொந்த ஊர் தாராபுரம் தாலுகாவில் இருக்கும் சேலம்பாளையம் எனும் கிராமம். பொதுசேவை செய்வதையே தனது முழு நேரக் கடமையாக செய்து வருகிறார். லஞ்சம் ஊழலுக்கு எதிராக திருப்பூரில் செயல்பட்டு வருகிறார். "தகவல் அறியும் உரிமைச் சட்டம்"  - Right To Information Act (RTI) இதை மக்களுக்குத் தெளிவாக விளக்குவதுடன், அந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி பலருக்கும் நியாயம் பெற்றுத் தந்திருக்கிறார்கள் ஐவரும் இவரது அமைப்பைச் சார்ந்தவர்களும் சேர்ந்து.

அதிகமாக "கேபிள்" டி.விக்கு கட்டணம் வசூலித்தவர்கள்; அதிக விலைக்கு சமையல் எரிவாயு விற்பனை செய்தவர்கள் ; இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் ஓட்டுனர் உரிமம் வழங்க  அதிக பணம் கேட்டவர்கள்; குடிநீர் இணைப்புத் தர அதிக பணம் கேட்டவர்கள்; அதிகக் கட்டணம் வசூலித்த தனியார்ப் பள்ளிகள் இப்படி தவறு செய்யும் பலரையும் திருப்பூரில் அடையாளம் கண்டு சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள் இவரும் இவரது அமைப்பைச் சேர்ந்தவர்களும்.

மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற கொள்கையோடு இரவு பகலாகப் பாடுபடும் உயரிய மனிதர் நமது ஈஸ்வரன் ஐயா.

தமிழ் என் அடையாளம்!
   திருமதி கோவை மு சரளா அவர்கள் 

இவர் தனியார் பொறியியல் கல்லூரியில் ஒருங்கிணைப்பாளராகப் பணிபுரிகிறார். உளவியல் பட்டம் பெற்றிருக்கிறார். தமிழின் மீது கொண்ட காதலால் தமிழ் மொழியில் முனைவர் தகுதி ஆய்வை மேற்கொண்டிருக்கிறார் . கடந்த எட்டு வருடகாலமாக கவிதை கட்டுரைகளைப் பல்வேறு இதழ்களுக்கும் ,மின் இதழ்களுக்கும் எழுதி வருகிறார். 

குவைத்திலிருந்து வெளிவரும் ஈகரை இணைய கட்டுரை போட்டியில் இவரின் "பெண்ணாய்ப் பிறந்திட" என்னும் கட்டுரை இரண்டாவது பரிசைப் பெற்றிருகிறது .

ஜெர்மனியில் இருந்து வெளிவரும் தமிழமுதம் என்னும் இதழில் வெளிவந்த "ஈழத்து சகோதரிக்கு " என்னும் கவிதை  முதல் பரிசு பெற்றிருகிறது .

மௌனத்தின்  இரைச்சல்கள் , காதலின் சாரல் என்னும்  இரண்டு கவிதை நூல்கள் புத்தாண்டில் வெளிவர இருக்கிறது. சமூக நல ஆர்வலராக, உளவியல் ஆலோசகராக ,கவிதாயினியாக ,ஆசிரியராக ,பல்வேறு அவதாரங்களில் தன்னை  நிலைப்படுத்தி கொண்டு இருக்கிறார்.

திரை கடல் ஓடியும் திரவியம் தேடு!
 - திரு. பொற்கை பாண்டியன் அவர்கள்

இவரது சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம் பாலாமடை கிராமம். தற்போது மதுரையில் வசித்து வருகிறார். இவர் சலவைக் கல் (கிரானைட்) ஏற்றுமதி செய்து வருகிறார். நெல்லை அதியமான் பெருஞ்சித்திரனார் நடத்தி வந்த "தென்மொழிப் பத்திரிகையில்" இவரது ஆசிரியராக இருந்தார். இவர் தாய் தந்தை இருவருமே தலைமை ஆசிரியர்களாகவும், சிறந்த தமிழ் ஆர்வலர்களாகவும் இருந்து வந்தவர்கள். இவர் உடன் பிறந்தவர்களில் இவர் தான் இன்று பெரும் தமிழ் ஆர்வம் கொண்டவராய் இருந்து வருகிறார்.

இவர் பெருஞ்சித்திரனாரின் மீது கொண்ட மரியாதையாலும் அன்பாலும், இவரது மகனுக்கு "பெருஞ்சித்திரனார்" என்று பெயர் சூட்டி இருக்கிறார். 

"எத்தனை பணிகள், தொழில் சார்ந்த வேலைகள் இருந்தாலும், தமிழுக்காக, தமிழ் மண்ணுக்காக, மக்களுக்காக  ஏதாவது செய்ய வேண்டும் ", என்ற கொள்கையை உடையவர்.

இணையத்தால் இணைவோம்!
 திரு. மதுமதி அவர்கள்

 கல்லூரியில் படித்த போது, "மில்லேனியம் ஆண்டின் சிறந்த மாணவன் என்கிற கல்லூரி தந்த விருது" ;  பாரதியார் மாணவர் தமிழ் மன்றம் வழங்கிய இளந்தமிழறிஞர் விருது மற்றும் தமிழய்யா கல்விக்கழகம் வழங்கிய இலக்கியத்திலகம் விருது போன்றவை இவர் கல்லூரிக் காலத்திலேயே சிறந்த தமிழ் எழுத்தாளராக உருவாகத் தொடங்கியதற்குச் சான்றுகள்.

இவரது முதல் கவிதைப் புத்தகத்தையும் கல்லூரியே வெளியிட்டிருக்கிறது; இவர் பயின்ற ஸ்ரீ வாசவி கல்லூரி (ஈரோடு) முதல்வர் திரு. சிவக்குமார் அவர்களுக்கு இவர் எழுத்தாளராக உருவானதற்கு முக்கியப் பங்கு இருக்கிறது என்று நன்றியோடு குறிப்பிடுகிறார். பல மாத இதழ்களில் இவர் எழுதி வருகிறார்.

ஐம்புலன்,கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் கோபம், அம்மு கொலை வழக்கு, ஆருத்ரன் போன்ற திரைப்படங்களில் பாடலாசிரியராக இருந்திருக்கிறார். இன்னும் வெளிவராத சில படங்களுக்கும் பாடலாசிரியராக இருக்கிறார். வகுப்பு வாதங்களை புறக்கணிக்கும் இவர், பேச்சளவில் மட்டும் இல்லாமல், கலப்புத் திருமணமும் செய்திருக்கிறார்.

"தற்போது சிறிய பட்ஜெட் படங்களில் மட்டும் எழுதிவருகிறேன், விரைவில், பெரிய படங்களிலும் நீங்கள் என் பாடல்களை எதிர்பாக்கலாம்", என்று நம்பிக்கையோடு சொல்கிறார். இவரது இயற்பெயர் "மாதேஷ்".

Thursday, December 27, 2012

வலைச்சரம் சீனா அய்யாவுக்கு நன்றி!!

          டிசம்பர் விழாவிற்கும் பதிவர்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டாக்க வேண்டும் என்ற நோக்கத்தின் முதல் பயனை அடைவதில் பெரும் மகிழ்வு கொள்கிறோம்.


வலைசரம் சீனா அய்யாவிற்கு எமது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். 

     இன்று காலை தாய்த்தமிழ்ப் பள்ளியின் தாளாளர் கு.தங்கராசு அய்யா அவர்கள் அலைபேசியில் அலைத்து சொன்ன விபரமாவது, உங்கள் பார்வைக்கு...

ரூ.5000 நிதியை தாய்த்தமிழ் பள்ளிக்காக எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி வலைச்சரம் சீனா அய்யா வங்கி காசோலையாக அனுப்பி வைத்திருப்பதாக தெரிவித்தார். மேலும் பள்ளியின் சார்பாக தனது நன்றியை வலைப்பதிவர்களுக்கு தெரிவிப்பதாக கூறினார்.

விழாவின் முக்கிய நோக்கமாக தெரிவித்திருப்பதை இவ்விடத்தில் உங்களுக்கு நினைவுருத்துகிறோம்.


இவ்விழாவின் முக்கிய நோக்கம் : 

"  ஒன்றுபட்ட ஒரு நல்ல சமூகத்தை அமைக்க  நீங்கள் விரும்புவீர்களேயானால், உங்கள் பார்வையை மாணவர்களின் பக்கம் திருப்புங்கள். உங்கள் கரங்களை கொடுத்து அவர்களை வலுப்படுத்துங்கள் என்ற சிந்தனையை உலகிற்கு வெளிப்படுத்துவதே ஆகும்."


       இதில் தொழிற்களம், தமீழ் மீட்சி இயக்கம்  போன்ற இன்னும் பல அமைப்புகள் ஊடகங்களாக செயல்படுகின்றன.


        இவ்விழா மட்டுமல்ல, இனி தொழிற்களம் சார்பாக எவ்வித விழாவை நாம் நடத்துவதாக இருந்தாலும் அவ்விழாவை காரணமாக கொண்டு இணையத்தின் மூலமாக, முகம் தெரியாத பலரையும் வெளிச்சத்திற்கு கொண்டு வருவோம். என்பதை மட்டும் நமது சக நண்பர்களின் சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம்.


பதிவர்கள் நாம் நமது பலத்தை முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும். இந்த உலகத்தின் எந்த புள்ளிக்கும் நம்மால் எந்த ஒரு மாற்றத்தையும் உடனடியாக செய்திட முடியும் . 

ஒட்டு மொத்த பதிவர்களுக்கும் இடையே இணைப்பு பாலமாக தொழிற்களம் இருக்கும். 

அந்த வகையில், நமது முதல் நிகழ்வை துவங்கியதுமே முதல் ஆளாய் வாழ்த்து தெரிவித்தார் வலைச்சரம் சீனா அய்யா, அவர் தம் அனுபவங்கள் நம்மை இன்னும் சீர்படுத்தும் என்று உணருகிறோம். 

அவரைப்போலவே இன்னும் பல இணைய நண்பர்கள் பெரிய பொக்கிசமாக நமக்கு கிடைத்திருக்கிறார்கள். திண்டுக்கல் தனபாலன், ஜோதிஜி, மெட்ராஸ் பவன் சிவக்குமார், ஆரூர் மூணா, சி.பி.செந்தில்குமார், கவியாலி கண்ணதாசன், பரமேஸ் டிரைவர், வலையகம் அகரன், கோவை நண்பர்கள் சங்கவி, வீடு சுரேஸ்  போன்றோரும் தங்கள் ஆதரவை தெரிவித்து நம்மை மேலும் ஊக்கப்படுத்துகிறார்கள்.

இவ்விழாவில் தாய்த்தமிழ் பள்ளி மாணவர்களை உலகிற்கு கொண்டு செல்ல நம் பதிவர்கள் நம்முடன் துணை நிற்க வேண்டும். 

இவ்விழாவிற்கு பிறகு, உலக தமிழ் பதிவர்கள் மூலமாக கண்டிப்பாக ஒரு மாற்றம் அல்லது உதவி தாய்த்தமிழ்ப் பள்ளிக்கு ஏற்படும் என்றும், அவ்வாறே இன்னும் பல பள்ளிகள், திறமைசாலிகளை நாம் உலகிற்கு அடையாளம் காட்ட ஒன்று கூடுவோம் என்றும் நம்புகிறோம். 

- தொழிற்களம் அருணேஸ்
+9 1 95 66 66 12 14

Sunday, December 23, 2012

வாருங்கள் இணையத்தால் இணைவோம்

இதுவரை இணையம் மூலம் மட்டுமே பழகிய சொந்தங்கள் நேரில் காண ஒரு வாய்ப்பு .

 நாமும் வளர்ந்து நம்முடன் சமுதாயத்தையும் வளர்க்க ஒரு வாய்ப்பு.

தாய்  தமிழ் பள்ளி மாணவர்களின் அருமையான கலை நிகழ்ச்சிகள் காண ஒரு வாய்ப்பு ..

அந்த மாணவர்களுடன் கலந்துரையாடி மகிழ ஒரு வாய்ப்பு .

தமிழ்நாட்டை கலக்கிய ஒரு அருமையான ஆட்சிபணி அதிகாரியை சந்திக்க நல்ல வாய்ப்பு


வலைதளங்கள் இனி என்ன செய்ய வேண்டும் , வருங்காலம் எப்படி இருக்கும் என மற்றவர்களுடன் விவாதிக்க ஒரு வாய்ப்பு .

நமது தளம் மேலும் வளர , நாமும் பல புது விஷயங்கள் கற்று கொள்ள ஒரு வாய்ப்பு ..

இந்த அனைத்து வாய்ப்புகளும் வேண்டுமா ????

இங்கே  வாருங்கள் :

நாள்      :  டிசம்பர் 30, 2012 ஞாயிற்று கிழமை 

நேரம்   :   மதியம் 2.30 மணி முதல் 5.30 மணி வரை 

இடம்   :   திருப்பூர் குமார் நகர், 
                 ஸ்ரீ கருப்பராயன் சுவாமி கோவில் திருமண மண்டபம்,
                 திருப்பூர்.


விழா சிறக்க வாழ்த்துகளுடன் :

ராஜபாட்டை ராஜா

Friday, December 21, 2012

தமிழ் உங்கள் தாய் மொழியா? உறவாட வாருங்கள்!

தமிழுக்கும் சமூக ஒற்றுமைக்கும் மாற்றத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து ஒரு விழா நடக்க இருக்கிறது!

இதில் கலந்து கொள்ள, நீங்கள் பெரிய எழுத்தாளராக, தொழிலதிபராக, சமூக சேவகராக, பணம் படைத்தவராக, இப்படி எதுவும் தேவை இல்லை.

தமிழ் புரியுமா? தமிழ் தெரியுமா? தமிழரா? அது போதும்!

சமூக மாற்றம் ஒன்று கொண்டு வர விரும்புகிறீர்களா? உறுதியாக நீங்கள் கலந்து கொள்ள வேண்டிய விழா இது!

"  ஒன்றுபட்ட ஒரு நல்ல சமூகத்தை அமைக்க  நீங்கள் விரும்புவீர்களேயானால், உங்கள் பார்வையை மாணவர்களின் பக்கம் திருப்புங்கள். உங்கள் கரங்களை கொடுத்து அவர்களை வலுப்படுத்துங்கள் என்ற சிந்தனையை உலகிற்கு வெளிப்படுத்துவதே ஆகும்."

இது தான் இந்த விழாவின் முக்கிய நோக்கமாக இருக்கிறது!

இதில் தொழிற்களம், தமீழ் மீட்சி இயக்கம்  போன்ற இன்னும் பல அமைப்புகள் ஊடகங்களாக செயல்படுகின்றன.

  நிகழ்ச்சி அமைப்பு : 

நாள்      :  டிசம்பர் 30, 2012 ஞாயிற்று கிழமை 
நேரம்   :   மதியம் 2.30 மணி முதல் 5.30 மணி வரை 
இடம்   :   திருப்பூர் குமார் நகர், 
                 ஶ்ரீ கருப்பராயன் சுவாமி கோவில் திருமண மண்டபம்,
                 திருப்பூர்.

இந்த விழாவில் "தாய்த் தமிழ்" பள்ளி மாணவர்களுக்கு முக்கியமாக பங்களிக்க வாய்ப்புக் கொடுத்து, அவர்களுக்கு பரிசும் வழங்க இருக்கிறோம்.

அதென்ன? தாய்த் தமிழ்ப் பள்ளி? இந்தப் பள்ளிக்கு என்ன சிறப்பு என்கிறீர்களா?

இதோ, "இங்கே" நீங்கள் தாய்த் தமிழ்ப் பள்ளியைப் பற்றி நீங்கள் படிக்கலாம்.


இந்த விழாவில், 

திரு. உ.சகாயம் ஐ.ஏ.எஸ். அவர்கள் 
மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியாளர்

தன் கரங்களால் தாய்த் தமிழ்ப் பள்ளி மாணவ செல்வங்களை பாராட்டி சிறப்புரையாற்றுகிறார்.

நீங்களும் எங்களோடு இணையுங்கள்! மேலும் விபரங்களுக்கு, இந்த வலைப்பூவில் இருக்கும், விழாநோக்கம் குறித்த பக்கத்தைப் பாருங்கள், மேலும், இங்கே அழைப்பிதழ் (மேலே இருக்கிறது), அதில் இருக்கும் அலைபேசி எண்களை அழையுங்கள்!

சரி, உங்களை திருப்பூரில் முப்பதாம் தேதி சந்திக்கிறேன்!


=======================================================================

உங்கள்,

தொழிற்களம் டிசம்பர் விழா அழைப்பிதழ்


பதிவுலகை சார்ந்த நண்பர்களுக்கென்றே இந்த அழைப்பிதழ் பதியப்பட்டுள்ளது.  

அனைத்து பதிவர்களையும் வருக! வருக!! என அன்புடன் வரவேற்கிறோம்.

தொழிற்களம் விழாவில், நிறைவின் சிறப்பு பகுதியாக பதிவர்களின் சிறப்பு ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்...!!


தலைப்பு :

நாளைய வலையுலகம்..?





Thursday, December 20, 2012

வாருங்கள் பதிவர்களே! திருப்பூரில் சங்கமிக்கலாம்..

           திவுலகத் தோழர்களுக்கு வணக்கம்.பதிவர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய மீண்டும் பதிவர்கள் சந்தித்து மகிழக்கூடிய ஒரு செய்தியோடு உங்களைச் சந்திப்பதில் மனமகிழ்கிறேன்.

         கடந்த ஆகஸ்டு மாதம் சென்னையில் ஒரு பிரம்மாண்ட பதிவர் சந்திப்பை நடத்தி முடிந்திருந்தோம் அல்லவா.அதன் வெற்றிக்கு முக்கியப் பங்கு வகித்தது தொழிற்களம் என்பதை நாம் அறிவோம்.

        தொழிற்களம் நிறுவனம் பதிவர்களை சிறப்பான முறையிலே ஊக்குவித்து பலருக்கும் பயன்படும் பதிவுகளை பதிவர்களை எழுத வைத்துக்கொண்டிருப்பதையும் அறிவோம்.  கடந்த காலங்களில் எந்த ஒரு நிறுவனமும் பதிவர்களை இப்படி ஊக்குவித்ததா எனத் தெரியவில்லை என்பதைவிட இல்லையென்று சொல்லலாம்.பதிவர்களுக்காகவே மக்கள் சந்தை.காம் தொழிற்களம் என்றதொரு வலையை உருவாக்கி இருக்கிறார்கள்.அதில் பல பதிவர்கள் பல செய்திகளைப் பகிர்ந்துகொள்கிறார்கள்.

        அவ்வப்போது பதிவர்களைப் பாராட்டி பரிசளித்து  அவர்களை ஊக்குவிக்கும் நோக்கோடு பல விழாக்களை நடத்தி வருகிறார்கள்.அந்த அருமையான செயலுக்கு பதிவர்கள் கட்டாயம் தங்களது பாராட்டுதல்களை தொழிற்களத்திற்கு தெரிக்க வேண்டும்.

       தொழிற்களம் இப்போது 'உறவோடு உறவாடுவோம்' என்ற தலைப்பில் டிசம்பர் 30 ம் நாள் மாபெரும் விழாவை நடத்த உள்ளது அவ்விழாவிற்கு முன்னாள் மதுரை மாவட்ட ஆட்சியர் திரு.சகாயம் அவர்கள் தலைமை தாங்குகிறார்.

    இந்த விழாவில் தமிழ் வலைப்பதிவர்கள் சங்கமமும் நடைபெறுகிறது.பதிவர்கள் ஒன்று கூடும் கருத்தரங்கமும் நடக்கவிருக்கிறது.ஏற்கனவே பதிவுலகத்திற்கு தொழிற்களத்தின் சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.இருப்பினும் இறுதியழைப்பை பதிர்வர்களுக்கு கொடுக்கவும் தொழிற்களம் விரும்புகிறது.விரைவில் அழைப்பு உங்களுக்கு வந்து சேரும்.

       இவ்விழாவில் கலந்துகொள்ளும் பதிவர்கள் தங்கள் வருகையை உறுதி செய்து கொண்டால் அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வசதியாயிருக்கும்.வருகையை உறுதி செய்த பதிவர்களுக்கு முன்னதாக இருக்கை ஒதுக்கீடு செய்யப்படும்.எனவே  டிச 30 விழாவில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தங்கள் வருகையை உறுதி செய்துகொள்ளுங்கள்.இதுவரை 30 பதிவர்கள் வருகையை உறுதி படுத்தியுள்ளனர்.திங்கட் கிழமை தங்கள் வருகையை உறுதி செய்த பதிவர்களின் பட்டியல் வெளியிடப்படும்..

நன்றி!

அன்புடன் மதுமதி

வரவேற்புக்குழு:

சீனு
கண்மணி
என் ராஜபாட்டை ராஜா
செழியன்

கடந்த ஆகஸ்டு மாதம் சென்னையில் நடந்த பதிவர் சந்திப்பில் மக்கள் சந்தை.காம் நிறுவனர் திரு.சீனிவாசன் அவர்கள் உரையாடிய காணொளி


கடந்த ஆகஸ்டு மாதம் சென்னையில் நடந்த பதிவர் சந்திப்பில் மக்கள் சந்தை.காம் நிர்வாக இயக்குனர் தோழர் அருண் அவர்கள் உரையாடிய காணொளி





.
உறவோடு உறவாடுவோம் விழா குறித்த மேலான தகவல்களைக் காண இங்கே செல்லுங்கள்.

Tuesday, December 18, 2012

வலையுலக நண்பர்களுக்கு தொழிற்களம் அழைப்பிதழ்

இணையத்தால் இணைந்துள்ள நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்!!

தொழிற்களம் டிசம்பர் விழா குறித்து முதல் அறிவிப்பை நேற்று வெளியிட்டதுமே அலைபேசியிலும், மின்னஞ்சலிலும் நம்மை தொடர்பு  கொண்ட சக நண்பர்கள், என்ன இவ்வளவு குறுகிய நாளில் தெரிவிக்கின்றீர்கள்? முன்கூட்டியே ஏன் தெரிவிக்கவில்லை? என்று உரிமையுடன் கேட்டனர்.

இவ்விழாவை ஒரு பொது விழாவாக நடத்தினாலும், நம் இணைய நண்பர்களை பற்றி வெளி உலகிற்கு கொண்டு செல்ல சரியான சந்தர்ப்பமாக இவ்விழாவை பயன்படுத்த நம் நண்பர்கள் உருதுணையாக இருந்து வருகின்றனர்.

அந்த வகையில் முதலில் உரிமையுடன் நம்மை தொடர்பு கொண்ட மதுமதி அவர்கள், "ஒட்டுமொத்த பதிவுலகையும் அழைத்து இந்த விழாவை திருப்பூரில் பிரம்மாதப்படுத்தி விடலாம்" என்றார். அத்துடன் இவ்விழாவில் இணையத்தின் நன்மை குறித்து கருத்தரங்கத்தில் பேசவும் சம்மதம் தெரிவித்தார். 

மற்றும் அன்பின் சீனா அய்யா முதல் ஆளாய் தனது வழக்கமான பானியில் ஆதரவை தெரிவித்து நமக்கு உற்சகத்தை வழங்கி இருக்கிறார்.

இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்று "பிரபல பதிவர்" சீனு, மற்றும் செழியன், பதஞ்சலி ராஜா, செல்லதுரை போன்ற இளைஞர் பட்டாளம் துணை நின்று வரவேற்பு குழுவாக செயல்பட ஆயத்தமாகி விட்டனர்.

இன்னுமொரு செய்தி என்னவென்றால்,

நம்ம திண்டுக்கல் தனபாலன் அலைபேசியில், கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் விடாமல் இவ்விழா குறித்தும், சமீபத்திய நிகழ்வுகள் குறித்தும் பேசிவிட்டு, "நாம இல்லாம விழாவா?" என்று குதுகளிக்க வைத்தார். மேலும் நண்பர்கள் அனைவரையும் திரட்டுவோம் என்று  மிகுந்த உத்வேகத்தை கொடுத்தார்.

இங்கணமே நம் குழு நண்பர்கள் அனைவருமே இவ்விழாவை சிறப்பிக்க பெரும் துணைசெய்து வருகின்றனர். 

அவர்கள் அனைவருக்கும் நன்றி என்று சொல்லி பிரித்திட முடியாது அல்லவா?

இதோ!  இணைய நண்பர்களே உங்கள் அனைவருக்கும் இந்த பூச்செண்டு தொழிற்களத்தின் சார்பாக


தொழிற்களம் தங்களை வருக!! வருக!! என வரவேற்கிறது.

தொழிற்களத்தின் "உறவோடு உறவாடுவோம்" டிசம்பர் விழாவில் சந்திப்போம் தோழர்களே!!


Sunday, December 16, 2012

தாய் தமிழ் பள்ளியும் தொழிற்களம் விழாவும்

    தொழிற்களம் டிசம்பர் விழாவை நடத்த வேண்டும் என்பதை மூன்று மாதங்களுக்கு முன்னரே திட்டமிட்டிருந்தாலும், தமிழர் திருநாளாம் பொங்கலை முன்னிட்டு விழாவை அமைத்திடலாம் என்றே யோசனையில் வைத்திருந்திருந்தோம். 

ஆனால் முதலில் ஊன்றிய விதைக்குத்தானே வீரியம் அதிகமாக இருக்கும்? ஆக, திட்டமிட்டபடி தொழிற்களம் தனது முதல் விழாவை டிசம்பரில் நடத்த ஆயத்தமாகிவிட்டது.

மதுரை மாவட்ட முன்னாள்  ஆட்சியாளர் திரு.உ.சகாயம் அய்யா அவர்கள் இவ்விழாவில் கலந்துகொள்ள தமிழ் மீட்சி இயக்கத்தின் மாநில செயலாளர் திரு. நந்தகோபால் அவர்கள் பெரும் ஆர்வத்துடன் எம்முடன் இணைந்தார். 

போதாதா? 

உடனே களத்தில் குதித்துவிட்டோம்.. 

பொதுவாக இவ்விழாவின் நோக்கமானது,

 கண்டோம்!! களித்தோம்!! சென்றோம்!! 

என்றில்லாமல், ஒரு விதையாக இருந்து வளர வேண்டும் என்பதையே மக்கள் சந்தையின் நிறுவனர் அய்யா திரு.சீனிவாசன் அவர்கள் அன்புகட்டளையாக எமக்கிட்டிருந்தார். அதன்படியே நமது சக நண்பர்களான பதிவர்களை ஒன்றிணைத்து பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டோம். அதில் பள்ளி மாணவர்களுக்கு இணையத்தையும், தமிழையும் கொண்டு செல்வது என்று தீர்மானித்தோம். சரி, அரசு, தனியார் பள்ளிகள் அனைத்திற்கும் நேரடியாக செல்வோம் அங்குள்ள மாணவர்கள் அனைவரிடமும் தமிழுணர்வுள்ள போட்டிகளை நடத்தி அவர்களுக்கு பரிசுகள் வழங்குவோம் என்று எண்ணி தயார் செய்த வடிவமைப்பை மக்கள்சந்தை சீனிவாசன் அய்யாவிடம் கொண்டு சென்றோம். அனைத்தையும் பார்த்துவிட்டு, மெலிதாக புன்னகைத்தார். 

   தொடர்ந்து தனது கைப்பேசியில் ஒரு எண்ணை தேடி எடுத்து என்னை பார்த்து,  இந்த எண்ணில் தொடர்புகொண்டு பின் நேரில் போய் பாருங்கள் அருணேஸ் மேற்கொண்டு தன்னால் நடக்கும் என்றார்.


விபரம் எதுவும் அறியாமல், அய்யாவின் உத்தரவின் படி நேரில் சென்றேன்.

   இரண்டு மணி நேரம் அவர் சொன்ன அந்த இடத்தில் இருந்து விட்டு, அங்கிருந்து கிளம்பும் போது சீனிவாசன் அய்யாவிற்கு கூப்பிட்டு பெரிய தைரியத்தையும், என் தமிழையும் துணைகொண்டு சொன்னேன்.


   ஆம், எம் செல்லங்கள் தமிழ்மொழியில் மட்டுமே பாடங்களை பயின்று வருகிறார்கள். ஆசிரியர்களை கூட அக்கா என்றே அழைக்க பயிற்றுவித்து, தமிழகத்தின் தென் மாவட்டத்தின் பனியன் நகரமாம் திருப்பூரின் ஓரத்தில் கடந்த 18 வருடங்களாக அமைதியாகச் செயல்பட்டு வருகின்றது  அந்த அற்புதமான பள்ளி.  அது,

தாய்த்தமிழ் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி :

310 மாணவர்கள், ஐந்தாம் வகுப்பு வரை பாடப்பிரிவுகள் என நிதானமாகவும் மிக நேர்த்தியாகவும் செயல்பட்டு வருகிறது தாய்த்தமிழ் பள்ளி. 

    எம்முடன் வந்த புகைப்படக்காரர் கைகட்டி நின்றதை பார்த்த ஒரு செல்லம், அருகில் வந்து அவர் கையை தட்டிவிட்டு சொன்னது " அடிமை போல நிற்க்காதீங்க அண்ணா" என்று.

பள்ளியின் உள்ளே நுழையும் பொழுதே எம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஒரு நிகழ்வு,


    வாசல் கதவை ஒரு பெரியவர் திறந்து உள்ளே  செல்ல அனுமதியளித்தார். உள்ளே செல்லும் போதே வலது புற்றத்தில் ஒரு அம்மா, ஓரத்தில் குழந்தைகளின் சமையல் பாத்திரங்களை கழுவிக்கொண்டிருந்தார். பின் அவராகவே அருகில் வந்து, "சொல்லுங்கள் என்ன விசயம்? என்றார்.


நம் நோக்கத்தை சொல்லி, பொருப்பில் உள்ளவர்களை பார்த்து பேச வேண்டும் என்றோம். 

சிரித்தபடியே எங்களுக்கு அருகில் இருந்த நாற்காலியை எடுத்து போட்டுவிட்டு தொடந்தார் அந்த அம்மா. அவர் தான் பள்ளி அறக்கட்டளையின் அறங்காவலரான த.விசயலக்குமி அம்மா. 


தொடர்ந்து பள்ளியின் தலைமை தாளாளர் கு.ந.தங்கராசு அவர்களை சந்தித்து பேசினோம். மிக மிக அற்புதமான மனிதராக அவர் தெரிந்தார். குழந்தைகள் மேல் அவர் மிகுந்த அன்பும் அவர்கள் வெளிப்படுத்தும் ஆற்றலும் இவரிடம் இருந்து தான் விதைக்கப்பட்டு வந்திருக்கிறது.


ஒவ்வொரு குழந்தையும் முத்துக்கள் தான்.

     அங்குள்ள எந்த ஒரு குழந்தையை வேண்டுமானலும் உடனே தூக்கி ஒரு மேடையில் நிறுத்தினாலும் அவன் ஏதாவது ஒரு திறமையை வெளிப்படுத்தி விடுவான். அவ்வளவு ஆற்றல்!! அந்தக் குழந்தைகளிடம்.

மக்களின் நிதியால் மட்டுமே இந்த பள்ளி செயல்பட்டு வருகிறது. போதிய நிதி இல்லாமல் இதன் இயக்குனர் கு.ந.தங்கராசு அய்யா அவர்கள் வட்டிக்கு பணம் வாங்கி ஆசிரியர்களுக்கு சம்பளத்தொகை கொடுத்து வருகிறார்.

இவ்வளவு சிரமங்களுக்கு இடையிலும் இந்த பள்ளியை நடத்தக் காரணம் என்ன என்று கேட்டதற்கு அவர் அளித்த பதில் தான் இன்னும் எம்மை அங்கிருந்து  அழைத்து வர விடாமல் தங்க வைத்து விட்டது.  ஆம்,

இதுவா சிரமம்? ஹா.. ஹா.. ஹா.. 

எங்கள் குழந்தைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விருட்சங்கள். ஒருமுறை எமது பள்ளியில் படித்த மாணவன் ஒருவனின் தந்தையான உள்ளூர் உள்ளாடை தயாரிப்பு நிறுவனத்தின் முதலாளி ஒருவர்,  உங்கள் பள்ளியில் படித்த மாணவன் என்பதால் தான் அவன் படிக்கும் கல்லூரில் அனைத்து மாணவர்கள் முன்னிலையிலும் என் மகனை "தமிழ் வழியில் படித்த மாணவன் இவன்" என்று பெருமைபடுத்தினார்கள் என்று கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

நமது பள்ளியில் படித்து வெளியில் சென்ற மாணவர்கள் அனைவருமே மேல்நிலை படிப்புகளில் சிறந்த மாணவர்களாக விளங்குகின்றனர். அனைத்து பள்ளிகளும் "தாய்த்தமிழ் பள்ளி மாணவன்" என்றாலே ஒரு மரியாதையுடன் பார்க்கின்றன.

இதைவிட மகிழ்ச்சி என்ன இருக்க போகிறது சொல்லுங்கள்? என்றார்.

உண்மை தானே சொந்தங்களே?

       இப்படி சத்தமே இல்லாமல் எத்தனையோ பள்ளிகள் இருக்கின்றன. இந்த ஒரு பள்ளியை வெளிச்சப்படுத்துவதனால் இது போன்ற மற்ற பள்ளிகளையும் உலகம் தேடிப் பிடிக்கும் என்ற எமது நிறுவனர் சீனிவாசன் அய்யா அவர்களின் சொல்லை செயலாக்க இதோ விரைந்திடுகிறோம்.

எம்முடன் உங்கள் கரங்களும் வலுவேற்க வரவேற்கிறோம்..




வலையுலக நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்!!

      கிட்டத்தட்ட ஆறு இலட்சம் ரூபாய் கடனும், அதில் வட்டியுடனான கடன் மூன்று இலட்சமும் உள்ள ஒரு நெருக்கடியான கட்டத்தில் இந்தப் பள்ளியை இவர்கள் நடத்தி வருகின்றனர். வலையுலக நண்பர்கள் இவர்களை நேரடியாக தொடர்பு கொண்டு உதவ முன்வர வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். 

- தொழிற்களம் அருணேஸ்




தொடர்புக்கு :
தாய்தமிழ் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி
1/607 அ, வள்ளளார் நகர் கிழக்கு
திருப்பூர் - 641604.

கு.ந.தங்கராசு
+91 98439 44044

Saturday, December 15, 2012

தொழிற்களம் நடத்தும் டிசம்பர் விழா!!

அன்புக்குரியோர்களுக்கு வணக்கம்!

       டிசம்பர் 30, 2012 ஞாயிறு அன்று திருப்பூர், குமரன் ரோடு, பேருந்து நிருத்தம் அருகில் உள்ள  ஶ்ரீ கருப்பராயன் சுவாமி கோவில் திருமண மண்டபத்தில் தொழிற்களம் ஏற்று நடத்தும் " உறவோடு உறவாடுவோம்!!





இவ்விழாவை தங்கள் சுற்றமும் நட்பும் சூழ வருகை தந்து சிறப்பித்தும், தொடர்ந்து இணைந்திருக்கவும் விரும்புகிறோம்!!

தொழிற்களம் குழு

+91 95 66 66 12 14

விழா பற்றி மேலும் அறிய